Sunday 28 June 2015

சுக்கு மல்லி சுடுநீர்


சுக்கு மல்லி சுடுநீர்

தேவையானவை
  • மல்லி விதை - 2 டேபிள்ஸ்பூன்
  • மிளகு  -  ஒரு மேசைக்கரண்டி,
  • சீரகம்  -  ஒரு மேசைக்கரண்டி,
  • ஓமம் -  ஒரு மேசைக்கரண்டி
  • சுக்கு - ஒரு துண்டு
  • கருப்பட்டி - தேவையான அளவு
  • துளசி - கைப்பிடி.

செய்முறை
எல்லாவற்றையும் இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியையும் கருப்பட்டியும் சேர்த்து, 4 நிமிடங்கள் கொதித்த பிறகு கொஞ்சம் துளசியும் சேர்க்கவும். பிறகு இறக்கி, வடிகட்டிக் குடிக்கலாம்


மருத்துவப் பலன்கள்
உணவை எளிதில் ஜீரணிக்க உதவும். சளி வராமல் தடுக்கும்

தினை உருண்டை

தினை உருண்டை

தேவையான பொருட்கள் :
  • தினை - 100 கிராம் 
  • தேன் - 5 மேஜைக்கரண்டி 
  • முந்திரி - 10
  • பாதாம் - 10 
  • உலர் திராட்சை - 10 
  • நெய்  தேவையான அளவு.    

செய்முறை :

வாணலியில் தினையை கொட்டி வாசனை வரும் வரை நன்கு சிவக்க வறுத்து, ஆறவைத்து மாவாக அரைத்து கொள்ளவும்

நெய்யில் பாதாம், திராட்சையை வறுக்கவும்

ஏலக்காயை தூளாக்கவும்

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஏலக்காய் தூள், பாதாம், திராட்சை, தேன் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்

பலன்கள்

        புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது.

சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)


சாமை, கோழி ஊன்சோறு (பிரியாணி)

தேவையானவை
  • சாமை அரிசி - 500 கிராம்
  • நாட்டுக் கோழிக்கறி - 500 கிராம்
  • வெங்காயம், தக்காளி - 100 கிராம் (நறுக்கியது), 
  • இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு மேசைக்கரண்டி
  • சோம்பு, பட்டைப்பொடி - சிறிதளவு
  • தயிர் - அரைக் கோப்பை
  • புதினா - ஒரு கைப்பிடி அளவு
  • எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.      
     தாளிக்க
  • நெய் - 100 மி.லி., 
  • கிராம்பு - 5, 
  • ஏலக்காய்
  • பிரிஞ்சி இலை - தலா 2,
  • பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு

.
செய்முறை

       கோழிக்கறியைச் சுத்தப்படுத்தி, தயிர், உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் ஊறவிடவும். நெய்யைச் சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பட்டைப் பொடியைச் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின் புதினாவைச் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும். ஊறவைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கழுவிய சாமை அரிசியை (அரிசிக்கு இரண்டு மடங்கு நீர்) சேர்த்து வேகவிடவும்.


பலன்கள்

        நாட்டுக்கோழி உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் வலிமையைக் கூட்டும். ஆண்மையைப் பெருக்கும். அதனுடன் சாமை சேர்வதால், நார்ச் சத்து முழுதாகக் கிடைத்து உடல் பலத்தைக் கூட்டும்.

குதிரைவாலி வெண்பொங்கல்


குதிரைவாலி வெண்பொங்கல்

தேவையானவை
  • குதிரைவாலி அரிசி - ஒரு கோப்பை
  • பாசிப் பருப்பு - கால் கோப்பை
  • மிளகு - ஒரு தேக்கரண்டி 
  • நெய் - ஒரு மேசைக்கரண்டி
  • வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 ஆர்க்
  • நெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை

       குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு,  உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம். இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.


பலன்கள்

        சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்றது. புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம். எல்லாவற்றையும்விட நார்ச் சத்து மிக அதிகம். தொற்றாநோய்க் கூட்டங்களான சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், இதய நோய்களைத் தவிர்க்க மிக அவசியமானது நார்ச் சத்து. கரையும் நார்கள், இதய நாளங்களில் படியும் கொழுப்பைக் கரைக்கவும் சர்க்கரை திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு பயனாவதை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நார்ச் சத்து மிக முக்கியமான ஒரு சத்து. அளவில்லா நார்ச் சத்தைச் சுமந்து இருக்கும் வரகும் சாமையும் குதிரைவாலியும் அற்புதமான தானியங்கள்.

சோளப் பணியாரம்


சோளப் பணியாரம்

தேவையானவை
  • சோளம் - ஒரு கோப்பை
  • உளுந்து - கால் கோப்பை
  • வெந்தயம் - சிறிதளவு
  • சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
  • பச்சை மிளகாய் - காரத்துக்கேற்ப
  • கல் உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை

        சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுபோல அரைத்து, உப்புச் சேர்த்துக் கரைத்து, ஏழு மணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால், அது காரப் பணியாரம்.
          மாறாக, இந்த அரைத்த மாவில் தேவைக்கு ஏற்ப பனை வெல்லத்தைக் கரைத்து சேர்த்து, ஏலக்காய்த்தூளைப் போட்டு, கலந்து பணியாரம் சுட்டால் அது இனிப்புப் பணியாரம்.

பலன்கள்

           உடல் எடையை உரமுடன் ஏற்றும் தன்மை சோளத்துக்கு உண்டு. 'என் குழந்தை குண்டாக வேண்டும்’ என ஆதங்கப்படும் தாய்மார்கள், சோளத்தில் காரப் பணியாரமும் இன்னொரு நாள் பனை வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்துடன், குழந்தையின் உடல் எடையும் கண்டிப்பாகக்கூடும். எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்துக் குறைவினால் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்களுக்குச் சோள உனவு சிறந்தது. இது தரும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே இல்லை.

குறிப்பு

       ஏற்கெனவே தோலில் கரப்பான், சோரியாசிஸ், ஒவ்வாமை போன்ற நோய் இருப்பவர்கள் மட்டும், சோளம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தினைப் பாயசம்


தினைப் பாயசம்

தேவையானவை
  • தினை - 250 கிராம்
  • பனை வெல்லம் - 200 கிராம்
  • முந்திரிப் பருப்பு - 15, 
  • ஏலக்காய் - 5, 
  • உலர்ந்த திராட்சை - 15, 
  • நெய் - 2 தேக்கரண்டி.

செய்முறை

            ஒரு பாத்திரத்தில் 4 கோப்பை தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும். 10 நிமிடம் மெல்லிய சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.

பலன்கள்

           இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.

தினை காரப் பணியாரம்


தினை காரப் பணியாரம்

தேவையானவை
  • தினை அரிசி - 500 கிராம்
  • உளுந்து - 250 கிராம்
  • வெந்தயம் - 3 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 250 கிராம்,
  • மிளகாய் - 4, எண்ணெய்
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • சீரகம் - சிறிதளவு.
செய்முறை

          தினை அரிசி, உளுந்து, வெந்தயம் முதலியவற்றை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையைத் தாளித்து, புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.


           கடலைத் துவையல், புதினாத் துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.

பலன்கள்

           தினை காரப் பணியாரத்தில் புரதம் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலன் தரும். குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச் சத்து உணவாக இருக்கும். காரப் பணியாரம் செய்து கொடுத்தால், விரும்பிச் சாப்பிடுவார்கள்.

சோள தோசை


சோள தோசை

தேவையானவை
  • சோளம் - 500 கிராம்
  • உளுந்து - 100 கிராம்
  • வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு.
செய்முறை

    சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை ஊறவைத்து, தனியாக தோசைமாவு பதத்துக்கு அரைத்து உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் புளிக்கவைத்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.

பலன்கள்:- 

       இது. மாவுச் சத்து மற்றும் புரதச் சத்து அதிகம் உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்து உள்ளது